ரி20 கிரிக்கெட் போட்டியில் 13000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதலாவது இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியா மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராத் கோஹ்லி நிலைநாட்டினார்.
மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற போட்டியில் 17ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது விராத் கோஹ்லி 13000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார்.
கிறிஸ் கேல் (14562), அலெக்ஸ் ஹேல்ஸ் (13610), ஷொயெப் மாலிக் (13557), கீரன் பொலார்ட் (13537) ஆகியோரைத் தொடர்ந்து ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 13000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்த ஐந்தாவது வீரரானார் விராத் கோஹ்லி.
டெல்ஹி, இந்தியா, இந்தியர்கள், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்காக 403 போட்டிகளில் விளையாடியுள்ள விராத் கோஹ்லி, 386ஆவது இன்னிங்ஸில் 13000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார்.
கிறிஸ் கேலுக்கு அடுத்ததாக இரண்டாவது குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை விராத் கோஹ்லி எட்டிப் பிடித்தார்.
கிறிஸ் கேல் 381 இன்னிங்ஸ்களில் 13000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்திருந்தார்.
டெல்ஹி அணியில் 2007இல் அறிமுகமான விராத் கோஹ்லி, 2008 அங்குரார்ப்பண ஐபிஎல் அத்தியாயத்திலிருந்து தொடர்ச்சியாக றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.
மும்பை இண்டியன்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் 67 ஓட்டங்களைப் பெற்ற விராத் கோஹ்லி இதுவரை ரி20 போட்டிகளில் 286 இன்னிங்ஸ்களில் 13050 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.