அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “சேர் பெறுமதி வரி (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட மனு மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்மானமானது சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி இன்று (08) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியினைக் கருத்திற்கொண்டு மனுதாரர்கள் S.C (SD) 05/2025 மற்றும் S.C. (SD) 06/2025 ஆகிய இரு மனுக்களையும் தொடருவதில்லை என முடிவு செய்துள்ளதால் குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புடன் இணங்கும் தன்மை தொடர்பாக உயர் நீதிமன்றம் தீர்மானமொன்றை வழங்கவில்லை என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அத்துடன், கேகாலை தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர அவர்களது மறைவினால் அரசியலமைப்பின் 66(அ) உறுப்புரையின் பிரகாரம் 2025 ஏப்ரல் 06 ஆம் திகதியிலிருந்து பாராளுமன்றத்தின் உறுப்புரிமையில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதற்கமைய, அவர்களது மறைவு தொடர்பில் அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, இந்த உறுப்பினரின் குடும்பத்தினருக்கு பாராளுன்றம் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
அத்துடன், இது தொடர்பான அனுதாபப் பிரேரணை பிறிதொரு தினத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் பிரதி சபாநாயர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.