செயற்கை முறையில் பழுத்த மாம்பழங்களை எளிதாக கண்டுபிடிக்க சில டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
மாம்பழம்
முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை பழங்களின் ராஜா என்றும் கூட அழைப்பார்கள். கோடை காலத்தில் மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று ரசாயனங்கள் தெளித்து பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவை உடம்பில் பல பிரச்சினைகளை ஏற்படுத்த வழிவகுக்கின்றது. இதனால் பெரும்பாலான மக்கள் மாம்பழத்தை வாங்கி சாப்பிடுவதையே தவிர்த்து வருகின்றனர்.
இந்த பதிவில் மாம்பழத்தை செயற்கை முறையில் ரசாயணம் கலந்து பழுக்க வைப்பதை எவ்வாறு கண்டறியலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
எவ்வாறு கண்டறிவது?
மாம்பழத்தை விரைவில் பழக்க வைப்பதற்கு கார்பைடு பயன்படுத்தப்படுகின்றது. இது ஆரோக்கியத்திற்கு ஆபத்து என FSSAI எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழம் வெளியில் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், உள்ளே பச்சையாகவே தான் இருக்குமாம்.
ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்க வைத்த மாம்பழத்தில் இயற்கையான இனிப்பு இருக்காது. ஊட்டச்சத்து மதிப்பும் குறைவாக இருக்கும்.
மேலும் இந்த மாம்பழத்தை சாப்பிட்டால் வயிற்று வலி, வாந்தி, தலைவலி, தலை சுற்றல், வாய் புண், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இவ்வாறு செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லதல்ல.
செயற்கை மாம்பழம் பிரகாசமான மஞ்சள் நிறமாகவும், கடினமாகவும் இருக்கும். மேலும் கடுமையான மணத்தையும் கொண்டிருக்கும்.
இயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழம் சற்று மென்மையாகவும், நல்ல மணத்துடனும் இருக்கும்.