கிளிநொச்சி பிரபல பாடசாலை ஒன்றில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளனர்.
சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று (12) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் , கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொடர்புகொண்டு கேட்டபோது, பொலிசார் குறித்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.
விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையொன்றின் சிற்றூழியராக பணியாற்றும் இந்த நபர் விளையாட்டு ஒன்றின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார். இவரிடம் விளையாட்டுப் பயிற்சி பெற்றுவந்த சிறுவர்களில் 16 பேரை அவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 10 – 13 வயதுக்குட்டவர்கள் என்றும் இவர்களை பயிற்றுவிப்பாளர் மலசலகூடத்துக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் சிலரது நடத்தைகளில் மாற்றவும் கல்வியில் திடீர் பின்னடைவும் அவதானிக்கப்பட்ட நிலையில், சிறுவர்கள் இருவர் மூலமே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு சிறுவர்கள் உட்படுத்தப்பட்ட விடயம் வெளியே தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதை தொடர்ந்து, பொலிஸாருக்கு இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டது.