பல்கலைக்கழக கழிப்பறையில் கேமரா பொருத்திய விரிவுரையாளர் ஒருவர் பன்னல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேற்கு பல்கலைக்கழகத்தின் உணவு தொழில்நுட்பம் மற்றும் ஊட்டச்சத்து பீடத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்த 34 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
பல்கலைக்கழகத்தில் பெண் , ஆண் விரிவுரையாளர்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் முகம் கழுவும் தொட்டியின் கீழ் இரகசியமாக பொருத்தப்பட்ட கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விரிவுரையாளர்களில் ஒருவர் முகம் கழுவிக் கொண்டிருந்த இடத்தில், தொட்டியின் அடியில் இருந்து கறுப்பு நிற கம்பி தொங்குவதைக் கவனித்துள்ளார். இதை அடுத்து, சந்தேகமடைந்து சக விரிவுரையாளரிடம் தெரிவித்ததாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
ஆய்வின் படி அது Wifi கூடிய மிகச் சிறிய, உயர் தொழில்நுட்ப கமரா என அடையாளம் காணப்பட்ட அதேவேளை கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வேறு இடத்தில் சேமிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் மடிக்கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவை வழக்குப் பொருளாக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கேமரா சம்பவம் அம்பலமான நிலையில், பல்கலைக்கழக வளாகத்திலிருந்து தப்பிச் செல்லும் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பொலிஸார், Bஅறிக்கை மூலம் தகவல் வழங்கியுள்ளனர். சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அபாயம் இருப்பதாக கூறி, சந்தேக நபருக்கு பிணை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டாம் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று சந்தேக நபருக்கு பிணை வழங்க முடியாதென கூறிய நீதிபதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.



















