இலங்கையின் தனியார்துறை மேம்பாட்டுக்காகவும், வேலைவாய்ப்பு உருவாக்க முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் 3 வருடகாலத்துக்கு ஒரு பில்லியன் டொலர் சலுகைக் கடனுதவியை வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்கா உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை (7) நாட்டுக்கு வருகைதந்திருந்தார். அவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து புதன்கிழமை (7) இரவு உலக வங்கி மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறைந்த வட்டியுடனான இச்சலுகைக் கடனுதவியானது வலுசக்தி, விவசாயம், சுற்றுலா மற்றும் பிராந்திய அபிவிருத்தி என்பன உள்ளடங்கலாக வேலைவாய்ப்பு மற்றும் முதலீடு சார்ந்த உயர் வாய்ப்புக்களையுடைய துறைகளை இலக்காகக்கொண்டு, அவற்றின் மேம்பாட்டுக்காக வழங்கப்படவுள்ளது.
இதனூடாக பொருளாதார வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்கும், உள்நாட்டு உற்பத்தித்துறையை வலுப்படுத்துவதற்கும், நீண்டகால வளர்ச்சிக்குப் பங்களிப்புச்செய்யக்கூடியவாறான தனியார் முதலீடுகளை உள்ளீர்ப்பதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ‘உலக வங்கியின் இந்த நிதியளிப்பு இலங்கை மக்கள் மீதான முதலீடாகும். இந்நிதியுதவி வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும், சிறிய வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், நாடளாவிய ரீதியில் புதிய வாய்ப்புக்களைக் கண்டறிவதற்கும் பங்களிப்புச்செய்யும். நாம் இந்த உதவியின் ஊடாக சமுதாய மட்டத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி 3 வருடகால அடிப்படையில் வலுசக்தி துறைக்கு 185 மில்லியன் டொலர்களும், தனியார்துறை முதலீட்டுக்காக 800 மில்லியன் டொலர்களும், விவசாயத்துறை மேம்பாட்டுக்காக 100 மில்லியன் டொலர்களும், சுற்றுலாத்துறைக்காக 200 மில்லியன் டொலர்களும், பிராந்திய அபிவிருத்திக்காக 200 மில்லியன் டொலர்களும் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன.


















