மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலை இழுத்துச் சென்ற நபர் இரண்டு நாட்களின் பின் இன்று (22) சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார். கடந்த செவ்வாய்க்கிழமை (20) மந்திரியாறு நீரோடை பகுதியில் குறித்த நபர் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோதே முதலையால் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட இந்த நபரை கடந்த இரு நாட்களாக உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் தேடிவந்த நிலையில், இன்று காலை அவர், இடுப்புக்கு கீழ்ப் பகுதியற்ற நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



















