கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் நெரிசல் ஏற்பட்டு வருவதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார்.
இன்று (25) விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய அவர், அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பின்பற்றாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இலங்கை துறைமுகத்திற்குச் சொந்தமான அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு நிலம் கொள்கலன் நெரிசலைக் குறைப்பதற்காக சுங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட போதிலும், இதுவரை அந்த நிலத்திற்குள் எந்தவொரு கொள்கலன் லொறிகள் நுழையவில்லை என தெரியவருகிறது.
இதனால் கொள்கலன் லொறி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் உட்பட பலர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமை தொடருமாக இருந்தால், சரக்குக் கப்பல்கள் மீண்டும் வேறு துறைமுகங்களுக்கு திருப்பி விடப்படும் அபாயம் உள்ளது. மேலும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொள்கலன் லொறிகளில் இருப்பதால் காலாவதியாகும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.




















