இரண்டு நபர்களிடமிருந்து தலா 30,000 ரூபாய் இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டின் பேரில் கலைஞர் வினோத் தரங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுகம பகுதியைச் சேர்ந்த அதிபர் ஒருவரும், அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி ஒருவரும் தாக்கல் செய்த முறைப்பாடுகளுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிபர் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக குறித்த விசாரணைகளை நிறுத்துவதற்கு கடிதம் ஒன்றை வழங்குவதாகவும், விசாரணை தொடர்பான கோப்புகளைப் பெற்றுத் தருவதாகவும் கூறி குறித்த நபர் 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் கோரியுள்ளார்.
அதேபோல், விமானப் படை அதிகாரி தொடர்பிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக அவரை கைது செய்யாமல் இருக்கவும் மற்றும் அது தொடர்பாக கடிதம் ஒன்றை பெற்றுத் தருவதாக கூறியும் குறித்த சந்தேகநபர் இலஞ்சம் கோரியுள்ளார்.
அதன்படி, கைது செய்யப்பட்ட வினோத் தரங்க, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



















