சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 11 இந்தியர்கள் இன்று (05) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது கடுவலை நீதவான் பண்டார இளங்கசிங்க 11 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பெலவத்தை அக்குரேகொட பகுதியில் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த வீட்டில் இருந்து இந்தக் குழு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அந்த வீட்டைச் சுற்றி வளைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட குழுவில் மூன்று பெண் சந்தேக நபர்களும் எட்டு ஆண் சந்தேக நபர்களும் அடங்குகின்றனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.



















