கொதட்டுவ பொலிஸ் பிரிவின் மாணிகமுல்ல பகுதியிலும், கடுவெல தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகிலும், கடந்த ஓகஸ்ட் 6 ஆம் திகதி மாலை இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஒரு பில்லியன் ரூபாய் பெறுமதியான 10 கிலோகிராம் குஷ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
முதல் சந்தேகநபர், மாணிகமுல்ல பகுதியில் 5 கிலோகிராம் 154 கிராம் குஷ் போதைப்பொருள், ஒரு கைப்பேசி மற்றும் 100,000 ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, கடுவெல பகுதியில் மற்றொரு சந்தேகநபர் 5 கிலோகிராம் 106 கிராம் குஷ் போதைப்பொருள், ஒரு கார் மற்றும் 150,000 ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டு, கொதட்டுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் கொதட்டுவ மற்றும் கொழும்பு 14 பகுதிகளைச் சேர்ந்த 35 மற்றும் 64 வயதுடையவர்கள்.
இவர்களில் ஒருவர் 2021 ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு, 01 வருடம் 08 மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இவர் ஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்ட ஒருவருக்கு நில பாதுகாவலராக பணியாற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த போதைப்பொருள், தற்போது சிறையில் உள்ள தெமட்டகொட சமிந்தவின் முக்கிய உதவியாளரான ‘ச்சப்பா’ என்பவரிடமிருந்து பெறப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொதட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















