வடக்கு, கிழக்கில் அதிகப்படியான இராணுவப்பிரசன்னத்தை குறைக்க வலியுறுத்தி எதிர்வரும்(18) ஆம் திகதி முன்னெடுக்கப்பட உள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கதவடைப்பு போராட்டத்திற்கு நாம் முழுமையான ஆதரவினை வழங்குகின்றோம். நாட்டில் உள்ள ஏனைய ஏழு மாகாணங்களை விட வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னம் அதிகமாக இருக்கிறது.
எனவே வடகிழக்கில் உள்ள இராணுவத்தை குறைத்து அனைத்து மாகாணங்களுக்கும் சமமான அளவில் பங்கிடப்படவேண்டும். எமது மக்களின் காணிகளை இராணுவம் விடுவிக்கவேண்டும். தற்போதுகூட வவுனியா விமானப்படை முகாமுக்காக சகாயமாதா புரத்திற்கு பின்புறமுள்ள 8ஏக்கர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது.
ஆனால் அந்த கிராமத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றுகூட இல்லை. இறம்பைக்குளம் கிராமத்தில் பொதுத்தேவைக்கான காணி இல்லை. அந்தபகுதியில் உள்ள மயானத்திற்கான நிலம் போதுமானதாக இல்லை. எனவே இப்படியான ஒரு நிலை இருக்கும் போது இந்த காணி சுவீகரிப்பை எப்படி அனுமதிக்க முடியும்.
எமது பகுதிகளில் கிராமங்களுக்கு ஒரு இராணுவ முகாம் ஒன்று கட்டாயம் இருக்கும் நிலை உள்ளது. ஆனால் தெற்கில் அவ்வாறு இல்லை.
எனவே இவ்வாறான நிலமைகள் மாற்றப்படவேண்டும் என வலியுறுத்தி நாம் இந்த கதவடைப்புக்கு முழுமையான ஆதரவினை வழங்குகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ்
எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கில் அனுஷ்டிக்கப்படவுள்ள கதவடைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.
முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் இளைஞரான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் , ராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக குறித்த மரணத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அனுஷ்டிக்கப்படவுள்ள கதவடைப்புக்கு ஆதரவளிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
முன்னதாக மலையகத்தின் முக்கிய கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குறித்த கதவடைப்புக்கு ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பிரித்தானிய கிளை
வடக்கு–கிழக்குத் தழுவிய கடையடைப்புக்கு இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை ஆதரவை வழங்காது என அறிவித்துள்ளது.
அத்தோடு, சிலரின் தனிப்பட்ட தன்னிச்சையான செயற்பாடுகளை எங்கள் கிளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை தெரிவித்துள்ளது.
பிரித்தானிய கிளை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கதவடைப்பு
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முத்து ஐயன்கட்டு பகுதியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தருக்கு நீதி கோரி கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கதவடைப்பு போராட்டத்திற்கான அழைப்பு முறையான நடைமுறை ஒழுங்குகளை பின்பற்றாமல் விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச் செயலாளர் ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் இந்த அழைப்பை விடுத்துள்ளனர். கட்சியின் உட்புற ஆலோசனைகளையும், ஏனைய கட்சிகள், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள் போன்ற பொது அமைப்புக்கள் சிவில் சமூக அமைப்புக்கள் எதனுடனும் கலந்துரையாடாமல் தடுக்கப்பட்ட இத்தீர்மானம் இலங்கைத் தமிழரசு கட்சிக்குள் நிலவுகின்ற தன்னிச்சையானதும், சர்வாதிகார போக்கையுமே காட்டுகின்றது.
மேலும், தங்களது தனிப்பட்ட அறிவிப்புக்கு ஆதரவைப் பெறும் நோக்கில், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் ஊடகச் சந்திப்புகள் மற்றும் வர்த்தக சங்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட கட்டாயப்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
எதிர்ப்பு
இது கட்சியின் கண்ணியத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அத்தோடு இன்றைய சூழலில் கதவடைப்பு போராட்டம் என்பது இலங்கை அரசுக்கு எந்தவித அழுத்தத்தையோ பாதிப்பையோ ஏற்படுத்தாது.
வடகிழக்குக்குள் தமிழர்கள் மேற்கொள்ளும் களவடைப்பானது யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழ் மக்களையும், அன்றாடத் தினக்கூலி தொழிலாளர்களையும், வணிக நிறுவனங்களையும் பாதிப்பதாகவே அமையும்.
எனவே, இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகளை இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளை வன்மையாகக் கண்டிக்கிறது. இனிமேல் இத்தகைய சர்வாதிகார செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது என்பதையும் எங்கள் கிளை வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கதவடைப்புக்கு அழைப்பு
நாளை(18) வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்புக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாநகர மேயர் மதிவதனி விவேகானந்தராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர் தாயகமாக வடக்கு – கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் காணப்படுகின்றது. இதை எதிர்த்து தமிழர் தாயகத்தில் நாளை திங்கட்கிழமை பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எமது தமிழர் பிரதேசங்களில் இராணுவ அடக்குமுறைகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். தமிழர் நிலங்களில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும்.
சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் இராணுவத்தால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையைக் கண்டித்தும், அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம், இராணுவ அடக்குமுறை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாளை திங்கட்கிழமை வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்புக்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.



















