சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தந்துள்ளார்.
இன்று (23) காலை 9.30 மணியளவில், சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோர் மெகசின் சிறைச்சாலைக்கு வந்திருந்தனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது.
அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
‘அத தெரண’ நடத்திய விசாரணையில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த நாட்டின் வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் அவருக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க நேற்று காலை அவர் அங்கு முன்னிலையாகியிருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்தில் தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட பயணமாக லண்டன் சென்றுள்ளமை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியது.
ஜூன் 24 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பான சமரப்பணங்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
அதைத் தொடர்ந்து, விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய செண்ட்ரா பெரேரா மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது.



















