சமீப காலத்தில் செயற்கை நுண்ணறிவு உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
குறுகிய ஒவ்வொரு காலப்பகுதியிலும் ட்ரெண்ட் எனப்படும் நவீன சொல்லின் பயன்பாட்டை இணையவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
அதன்படி அண்மைய நாட்களில் ஜெமினி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புகைப்படங்களை ஒவ்வொருவருக்கும் ஏற்றாற் போல் மாற்றியமைக்கும் ஒரு வகை ட்ரெண்ட் ஆரம்பித்துள்ளது.
இந்த தொழில்நுட்பங்கள் குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் இணையவாசிகளின் ஆர்வம் என்பது குறைந்ததாகத் தெரியவில்லை.
நானோ பனானா எனப்படும் ஜெமினியின் புகைப்பட எடிட்டிங் கருவி மூலம் 90 களின் கதாநாயகன், கதாநாயகிகள் போல இணையவாசிகள் பலரும் தங்களுடைய புகைப்படங்களை மாற்றியமைத்து வருகின்றனர்.
கூகுளின் டீப் மைண்ட் (Deep Mind) பிரிவினர் இதை வடிவமைத்துள்ளனர்.
இதன் மூலம் முற்றிலும் வேறுபட்ட ஒரு காட்சியில் கற்பனை செய்துகொள்ளலாம்.
புகைப்படத்திற்கு எந்தவிதமான கற்பனைகளை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த கட்டளைகளை எழுத்து வடிவில் கொடுக்கும் போது, கற்பனையில் இருந்த காட்சியை ஜெமினி புகைப்படமாக வழங்குகிறது.
எனினும் இவ்வாறான விடயங்கள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கணினித்துறை சார்ந்தோர் கூறுகின்றனர்.
ஏஐ-யிடம் ஒருமுறை அளித்த தரவுகளை எப்போதும் நீக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.
ஏஐ-யிடம் புதிதாக ஏதேனும் கேட்கும்போதெல்லாம், ஏற்கனவே குறிப்பிட்ட கேள்விகளையும் கருத்தில் எடுத்துக்கொண்டே பதில் அளிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதேவேளை ஜெமினி நானோ பனானாவில் புகைப்படங்களைப் பதிவிட்டு மாற்றிக் கொண்டாலும் அதை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.




















