2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 51 இலட்சம் பேரை பொலிஸார் சோதனையிட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று (20) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 12 ஆம் திகதி முதல் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் நிலையில் இதுவரையில் 5,101,516 பேர் சோதனையிடப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 104,602 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களில் 4630 பேர் குற்றங்களுடன் நேரடி தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட பொலிஸாரின் நாளாந்த சோதனையில் 955 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1,422 கிலோகிராம் ஐஸ், 471 கிலோகிராம் ஹஷிஷ், 29 கிலோகிராம் கொக்கேய்ன், 13,773 கிலோகிராம் கஞ்சா, 3.5 மில்லியன் போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுதவிர 61 டி-56 மற்றும் 62 கைத்துப்பாக்கிகள் உட்பட 1,721 ஆயுதங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பாக 38 துப்பாக்கித் தாரிகள், மோட்டார் சைக்கிளை செலுத்திய 27 பேர் மற்றும் உதவிகளை வழங்கிய 263 பேர் உட்பட 328 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 46,909 பேர் மது போதையில் வாகனம் செலுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதற்காக அவர்களில் 3404 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.



















