வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், சுமார் 15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் பேரில் நடத்தப்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையாளி கைது செய்யப்பட்டபோது, இந்தக் கொலை ‘டுபாய் லொக்காவின்’ ஒப்பந்தத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 6 சந்தேக நபர்களிடம் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர கடந்த புதன்கிழமை, பிரதேச சபையின் பொது மக்கள் தினத்தில் தனது அலுவலகத்தில் இருந்தபோதே சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க பல விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்தன.
இதற்காக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இதன்படி, சந்தேக நபர்கள் கேகிராவ பகுதியில் மறைந்திருப்பது அடையாளம் காணப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், மேலும் பல பொலிஸ் குழுக்களுடன் இணைந்து, நேற்று (26) அதிகாலை கேகிராவ 50 வீட்டு தொகுதி பகுதியில் பயன்படுத்தப்படாத காணியில் இருந்த வீட்டினை முற்றுகையிட்டனர்.
அங்கு பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் கொலைச் சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் கைதாகியிருந்தார்.
கைது செய்ய முற்பட்டபோது பொலிஸாருக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, அதில் ஒரு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
அவ்வாறு தப்பிச் சென்றவர் பிரதேச சபைத் தலைவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கண்டுபிடிக்க விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கு குற்றச் சம்பவம் நடந்த நாளின் சிசிடிவி காட்சிகளும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டன.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மாறுவேடமிட்டிருக்கக்கூடிய அனைத்து வழிகளையும் அனுமானித்து, புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களைத் தயாரித்து, பொலிஸ் அதிகாரிகள் உட்பட அனைத்து விசாரணை அதிகாரிகளின் கைப்பேசிகளுக்கும் அனுப்பினர்.
இதற்கிடையில், தப்பிச் சென்ற துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நேற்று அதிகாலை கேகிராவிவிலிருந்து பேருந்து மூலம் கொழும்புக்கு வந்ததாக விசாரணை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
அந்தத் துப்புகளின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் கொழும்பு, மஹரகம, நுகேகொடை, கொட்டாவ, அத்துருகிரிய உட்பட பல இடங்களில் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதனிடையே கொழும்புக்கு வந்த சந்தேக நபர், அங்கிருந்து பொரளை சஹஸ்புர வீட்டுத் தொகுதிக்கு மிகவும் சூசகமான முறையில் சென்றுள்ளார்.
அங்கு தனது தோற்றத்தை மாற்றியமைக்க தலைமுடியை வெட்டி, உடைகளை மாற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் போதைப்பொருளை பயன்படுத்திய சந்தேக நபர், தனது கைப்பேசியை சார்ஜ் செய்ய அங்கிருந்த ஒருவரிடம் கொடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முச்சக்கர வண்டியில் நுகேகொடை நோக்கிச் சென்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையான அவர், இந்த பயணத்தின் நடுவிலும் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருளைத் தேடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொலைக்கான ஒப்பந்தத் தொகையின் ஒரு பகுதியை அவர் பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள பணத்தைப் பெறுவதற்காகவே மஹரகம நகருக்கு சென்றுள்ளதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மஹரகம நகரில் உள்ள போதி மரத்திற்கு அருகில் இருந்த ஒரு தொலைபேசி கடைக்குள், அவர் ஒரு மொபைல் போன் சார்ஜரை வாங்குவதற்காகச் சென்றுள்ளார்.
அப்போது சந்தேக நபருக்கு டுபாயில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், தன்னிடமுள்ள மொபைல் போனை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இதன்படி, மொபைல் போன் கடையிலிருந்து வெளியே வந்த சந்தேக நபர், பல விசாரணை அதிகாரிகளின் கூர்மையான கண்களுக்கு மத்தியிலும் மீண்டும் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
மஹரகம பகுதியில் இருந்து சந்தேக நபரைப் பின்தொடர்ந்து வந்த கண்காணிப்பு அதிகாரி ஒருவர், குறித்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்பதைத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியவுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தேடும் நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் தயார் செய்திருந்த வாட்ஸ்அப் குழுமத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு அனைத்துத் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கிய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சந்தேக நபர் இருக்கும் இடத்தை அப்போதே உறுதிப்படுத்தியிருந்தனர்.
எவ்வாறாயினும், தன்னை பின் தொடரும் கண்காணிப்பு அதிகாரி குறித்து சந்தேகம் ஏற்பட்டதால் சந்தேக நபர் ஓடித் தப்பிக்க முயன்றார். ஆனால், அவரை கைது செய்வதற்காகப் பல விசாரணை அதிகாரிகள் விரைவாக அந்த இடத்துக்கு வந்துள்ளனர்.
இதன்படி செயற்பட்ட விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் (STF) புலனாய்வு அதிகாரிகளும் சந்தேக நபரை கைது செய்தனர்.
சந்தேக நபரின் வலது கையின் மேற்புறத்தில் ஆங்கிலத்தில் ‘ANURADA’ என்றும், இடது கையில் சிங்களத்தில் ‘හිතුමතේ ජීවිතේ’ என்றும், மார்பின் இடது பக்கத்தில் மனைவிக்குரியது என்று கூறப்படும் பச்சை குத்திய அடையாளமும், வலது பக்கத்தில் ‘சந்தசி துவ’ என்று பச்சை குத்திய அடையாளமும் இருந்ததால், இந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என உறுதியாக அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், காலியில் உள்ள அங்குளுகஹ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நுவன் தாரக என்பவராவார்.
கைது செய்யப்பட்டவர் மீது 5 திருட்டு வழக்குகள், 2 கொள்ளை வழக்குகள், ஆயுதம் வைத்திருந்தமை உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்தக் கொலையை சுமார் 15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, இவரையும், கேகிராவில் கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உட்பட 6 சந்தேக நபர்களும் நேற்று இரவே மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட சந்தேக நபர்கள் குழு இன்று மாலை கொழும்பு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.



















