மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தமலை பகுதியில் நடப்பட்ட தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் மூவர் நேற்று இரவு (25.11.2025) கொக்கட்டிச்சோலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினர், தாந்தாமலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், பிரதேச சபை உத்தியோகத்தர் எனும் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரையும் இன்று (26.11.2025) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், இவ்வாறு கைது செய்யப்பட்ட சம்பவம் அறிந்தவுடன் நேற்று (25.11.2025) இரவு 10 மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னனி துணை செயலாளர் சட்டத்தரணி அ.நிதான்சன், மண்முனை தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் இ.கிரேஷ்குமாரன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், மட்டக்களப்பு மாநகர சபை பிரதி முதல்வர் வை.தினேஷ்குமார், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் முதல்வர் தி .சரவணபவன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் எனப்பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















