இயற்கை எம்மை மிகவும் விசித்திரமான முறையில் தண்டிக்கிறது. ‘டித்வா’வும் அவ்வாறே, இன்னும் பல வருடங்களுக்கு மக்கள் தலைநிமிர முடியாத அளவுக்கு தண்டித்துவிட்டுச் சென்றிருக்கிறது.
இலங்கை அண்மைக்கால வரலாற்றில் இல்லாதவாறான ஒரு அனர்த்தத்தை இம்முறை எதிர்கொண்டதுடன், அதன் காரணமாக பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
அத்துடன், யாரிடமும் கையேந்தாமல் வாழ்ந்த இன்னும் பலரை நிர்க்கதியாக்கியது.
அவ்வாறு அனாதரவான மக்களுள், தனது பெற்றோரின் மகிழ்ச்சிக்காக கஷ்டப்பட்டு முன்னேறிய நிமேஷும் ஒருவராவார்.
நிமேஷ் விக்ரமரத்ன, மாவனெல்லை – அரநாயக்க பிரதேசத்திலுள்ள அம்பலங்கந்தையில் வசித்து வந்தார்.
அவர் தொழிலால் ஒரு வர்ணப்பூச்சு கலைஞர் (Painter). சிறிய அளவில் தொழில் பயணத்தை ஆரம்பித்த அவர், பெரும் பயணமொன்றை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருந்தார்.
தனது பெற்றோரின் மகிழ்ச்சிக்காக அவர்கள் வசித்த வீட்டை அழகாக நிர்மாணிப்பதே நிமேஷின் ஒரே குறிக்கோளாக இருந்தது. அதனை அவர் நனவாக்கினார்.
எவ்வாறாயினும், அவை அனைத்தும் ஒரு கணத்தில் துகள்களாகச் சிதறின.
தனது கடின உழைப்பால் கட்டியெழுப்பிய வீட்டில் இறுதியில் அவருக்கு எஞ்சியது ‘செல்பி’ புகைப்படம் மட்டுமே.
தற்போது பாடசாலையொன்றில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் தங்கியிருக்கும் நிமேஷ், தனது வேதனை தாளாமல் வீட்டின் அன்றைய மற்றும் இன்றைய நிலையை தனது ‘பேஸ்புக்’ கணக்கில் பதிவிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அவ்வாறு இருந்த வேளையில் அத தெரண தொலைக்காட்சியின் ‘அனர்த்த நிலைமை தொடர்பான நேரடி ஔிபரப்பு நிகழ்ச்சியில்’ இன்று (5) அவரை இணைத்துக்கொள்ள முடிந்தது.
“வீடு இருந்த இடமே தெரியவில்லை. இனி பயன் இல்லை அண்ணா,” என்பதே அங்கு அவரால் கூறப்பட்ட ஒரே வார்த்தையாக இருந்தது.
அன்புடன் கட்டியெழுப்பிய வீட்டை நிமேஷ் இழந்த போதிலும், அவரது மிகப்பெரிய சொத்தான பெற்றோர் அவருடன் உள்ளனர்.
“நிமேஷ் நீங்கள் உடைந்து போக வேண்டாம். நாங்கள் இருக்கிறோம். எங்களுடன் கைகோர்க்க ஆட்கள் இருக்கிறார்கள்.
உங்கள் வீட்டை அந்த அளவுக்கு கட்ட முடியாவிட்டாலும், எப்படியாவது முயற்சிப்போம்,” என்பதே இந்த நிகழ்ச்சியில் நிமேஷுக்கு வழங்கப்பட்ட ஊக்கப்படுத்தலாக அமைந்தது.



















