சிறுபான்மை கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு விஜயதாச ராஜபக்ஸ முனைவதன் மூலம் எதனை எதிர்பார்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியா, சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் வாழுகின்ற எல்லா இன, மதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும்.
அதனூடாகத்தான் இந்த நாட்டில் ஜனநாயகம் வளர்ந்து வரக் கூடிய நிலை உருவாகும். இந்த நாட்டிலே யுத்தம் நடந்த வரலாறு இருக்கிறது.
இந்த நாட்டில் பெரும்பான்மை பேரினவாதிகள் செய்த அடக்குமுறையினால் அவர்களுடன் வாழ முடியாது என்று ஆயுதம் ஏந்தி போராடிய வரலாறு இருக்கிறது.
1983 யூலைக் கலவரம் போன்றன இந்த நாட்டிலே ஒரு பிளவை ஏற்படுத்தின. 2009 வரை பாரிய யுத்திற்கு முகம் கொடுத்தோம். இந்த நாட்டிலே யுத்தத்தை வெல்வதற்காக இராணுவ வீரர்களும், வேறு பலரும் பல தியாகங்களை செய்துள்ளார்கள்.
அவ்வாறு பெறப்பட்ட சமாதானத்தை சீர்குலைப்பதற்கு பல சதிகாரர்கள் இன்று மதவாதிகளாக, இனவாதிகளாக சதியைச் செய்து கொண்டிருக்கின்ற காலமாக இது இருக்கிறது.
சிறுபான்மை நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டும் என்ற விஜயராஜ ராஜபக்ஸ அவர்களுடைய பிரேரணை மூலம் சிறுபான்மை கட்சிகளிகளின் நாடாளுமன்ற பிரதிநித்துவத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என அவர் கருதுவராகவிருந்தால், அவர் இந்த நாட்டிலே எதை எதிர்பார்க்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது.
இன்று ஜேவிபி போன்ற கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஆற்றுகின்ற பங்களிப்புக்கள் அதேபோல் அரசாங்கம், அமைச்சுக்கள் விடுகின்ற தவறுகளை நாடாளுமன்றத்திலும், வெளியிலும், நாட்டிலும் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்துகின்ற நிலையில் ஜேவிபி போன்ற கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் இன்னும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கருத்து.
அதுபோல் தமிழ் பேசுகின்ற சமூகம் சார்ந்த பல சிறிய கட்சிகள் இருக்கின்றது. அவ்வாறான கட்சிகள் ஜனநாயகத்தை வலியுறுத்துகின்ற கட்சிகளாக தங்களது பிரதேசத்தில் வாழுகின்ற மக்களது பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காக ஜனநாயக விழுமியங்களை பேணுகின்ற கட்சிகளாகவுள்ள நிலையில் அதனை குறைக்க வேண்டும் என கருதுவார்களாகவிருந்தால் அவர்கள் இந்த நாட்டிலே ஏதோவொன்று நடந்து இன்னும் அதளபாதாளத்திற்கு செல்ல வேண்டும்.
இந்த நாட்டிலே ஜனநாயகம் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்று சிந்திப்பவர்களாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் எந்தவொரு ஜனநாயக சிறுபான்மைக் கட்சிகளும் இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்கோ, இந்த நாட்டில் வேறு பிரச்சனைகளை உருவாக்குவதற்கோ எந்தவொரு தூண்டுதலையும் இதுவரைக்கும் செய்யவில்லை. செய்யப்போவதும் இல்லை.
எனவே எல்லோரும் ஒருமித்த நாட்டிற்குள் ஒன்றாக வாழுவோம் என்று சொல்லுகின்ற நல்ல நிலமை வந்திருக்கிறது. எனவே இதனைக் குழப்பியடிப்பதற்காக இவ்வாறான கருத்துக்களை சொல்கிறார்கள்.
பெரும் தலைவர் அஸ்ரப் அவர்கள் அன்று ரணசிங்க பிரேமதாச அவர்களின் காலத்தில் 12.5 வீதமாக இருந்த நாடாளுமன்ற வெட்டுப்புள்ளியை 5 வீதமாக குறைத்ததன் உடைய பலாபலனை ஜேவிபி போன்ற சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் தான் அதிக இலாபத்தை பெற்றிருக்கிறார்கள்.
அதேபோல் சிறுபான்மைக் கட்சிகளும் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளார்கள். அது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் பார்க்க வேண்டும். எனவே அதில் கை வைப்பது, அதனை குறைக்க நினைப்பது தவறானது.
இன்று இருக்கின்ற அரசாங்கம் பெரும்பான்மை அரசாங்கம் அல்ல. 113 உறுப்பினர்களைக் கூட கொண்டிருக்கவில்லை.
இந்தநிலையில் விஜதாச ராஜபஸ்ச அவர்கள் கொண்டு வருகின்ற பிரேரணையை யார் ஆதரிக்கப் போகின்றார்கள் என்றே தெரியவில்லை.
நாங்களாக பதவி விலகி இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக வந்ததும் அவருக்கு மக்கள் கொடுத்த ஆணைக்கு மதிப்பளித்திருந்தோம்.
ஆனால் இந்த அரசாங்கத்தைப் பொறுப்பெடுத்த பின்னர் இவர்கள் இவ்வாறான கருத்துக்களை கொண்டு வந்து தேர்தல் முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முனைவார்களாக இருந்தால் அவர்கள் தோல்வியடைவார்கள் எனத் தெரிவித்தார்.