அண்மையில் மலையகத்தில் பெய்த அடைமழை காரணமாக, வெலிமடை நகரிலுள்ள ஏழு வர்த்தக நிலையங்கள் தாழிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
பதுளை – வெலிமடை வீதி, உமாஓயா ஆற்றுப்படுக்கைக்கும் பிரதான வீதிக்கும் இடையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த வர்த்தகத் தொகுதியில், பதுளை – பண்டாரவளை பஸ் நிறுத்தும் நிலையத்துக்கு அருகிலுள்ள வியாபார நிலையங்களே, இவ்வாறு தாழிறங்கியுள்ளன.
இது குறித்து வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
நகருக்குக் குடிநீரை விநியோகிக்கும் நீர்க் குழாய்கள், தமது கடைத் தொகுதிக்குக் கீழால் செல்வதால் அடைமழை காரணமாக அவற்றில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு அதிக நீர் வெளியேறியதாக கூறியுள்ளனர்.
இதனால், வீதியின் ஒரு பகுதி தாழிறங்கி வர்த்தக நிலையமும் தாழ் இறங்கியுள்ளதாகவும் உரிய நேரத்தில் நீர்வழங்கல் அதிகார சபையினர் நீரை முற்றாகத் தடை செய்ததில் பாரிய இழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை குறித்த வர்த்தக நிலையங்களில் வர்த்தக நடவடிக்கையை முன்னெடுக்க தமக்கு அச்சமாகவுள்ளதாகவும் இவற்றுக்கு நியாயமான தீர்வொன்றை, அரசும் பிரதேச செயலகமும் பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.