ஜனாதிபதி கோட்டாபயவின் நல்ல செயல்பாடுகளுக்கு ஆதரவு கொடுக்கும் அதேவேளை அவருக்கு தலைவணங்குவதாக முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மோட்டார் வாகன பதிவு திணைக்களத்திற்கு திடீர் விஜயமொன்றை முன்னெடுத்திருந்தார். அந்த விஜமானது சிறந்தது என்றும் அதற்கு நான் ஜனாதிபதிக்கு தலை வணங்குகிறேன்.
நான் ஜனாதிபதியை ஒருநாளும் நேரில் சந்தித்தது இல்லை. ஒருமுறை ஒரு நிகழ்வின் போது தூரத்தில் இருந்து கண்டிருக்கிறேன். இருந்தாலும் 62 லட்சம் மக்களின் விருப்பில் ஜனாதிபதி தெரிவு செய்யபட்டார். அவர் எமது ஜனாதிபதி. அவரின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயங்கமாட்டேன்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்.
ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர் பெல்லன்வில விகாரைக்கு சென்றார். அங்கே இருந்த பிரதான பிக்குவிடம் என்ன கூறினார். சுவிஸ் தூதரகம்தான் புலனாய்வுத்துறை அதிகாரி நிஷாந்த டி சில்வா சுவிஸ் நாட்டுக்கு கொண்டுசென்றுள்ளதாக தெரிவித்தார். அதற்கு சுவிஸ் அரசாங்கம் உதவியுள்ளதாக கூறினார். இவை வேறு எவரும் கூறியவை அல்ல. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே கூறினார்.
நாங்கள் இவை குறித்து கவனமாக பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றோம். அதேபோல கடத்தப்பட்ட சம்பவம் கூட சுவிஸ் தொடர்பாகவே அமைந்துள்ளது. இவற்றை பார்க்கும் போது எதோ ஒரு தொடர்பு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.
நான் இதனை நாட்டிலுள்ள புத்திஜீவிகளுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டில் எத்தனை தூதுவராலயங்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஆலயங்கள் இருக்கின்றன. ஆனால் இவர்கள் எதற்காக சுவிஸ் தூதுவராலயம் பற்றியே பேசுகிறார்கள். அதில் ஏதோ உள்ளது.
நிஷாந்த செல்வதும் சுவிஸ், அவருக்கு உதவுவதும் சுவிஸ், கடத்தப்படுவதும் சுவிஸ் காரியாலய அதிகாரி. யோசித்து பாருங்கள் எங்கேயோ தொடர்பு உள்ளது” என்றார்.