ஈரானின் சக்திவாய்ந்த புரட்சிகர காவல் படைப்பிரிவின் முதன்மைத் தளபதியான ஜெனரல் காசீம் சூலேமானியை இலக்கு வைத்து அமெரிக்கா ஈராக் தலைநகர் பக்தாத்தில் அதிரத் தாக்குதல் ஒன்றை இன்று அதிகாலை நடத்தியுள்ளது
பக்தாத் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடத்தப்பட்ட. இந்தத் தாக்குதலில் 62 வயதான ஜெனரல் காசீம் சூலேமானியும் ஈராக் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் அபு மஹ்தி அல்-முஹன்டியும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜெனரல் காசீம் சூலேமானி விமானம் ஊடாக பக்தாத் விமானநிலையத்தை சென்ற பின்னர் அவரை ஈராக்கிய ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் அபு மஹ்தி அல்-முஹன்டி வரவேற்று அழைத்துச்சென்றபோது இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் ரம்பின் நேரடி உத்தரவில் சூலேமானி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சான பென்ரகன் அறிவித்துள்ளது.
அத்துடன் வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்க பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் ஜெனரல் காசீம் சூலேமானியை கொல்லும் முடிவை அமெரிக்க ராணுவம் எடுத்ததாகவும் பென்ரகன் விளக்கமளித்துள்ளது.
ஆனால் இந்த நடவடிக்கை மிகவும் அபாயகரமான முட்டாள்தனமான நடவடிக்கையென அறிவித்துள்ள ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிப் இந்தத்தாக்குதலுக்கு மூர்க்கத்தனமாக பழிவாங்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்
இந்த அதிரடித் தாக்குதல் பற்றி சிறப்பு பார்வை இதோ:
ஈரானிய ராணுவகட்டமைப்பில் புரட்சிகர காவல் படைப்பிரிவின் முதன்மைத்தளபதியாக இருந்த ஜெனரல் காசீம் சூலேமானி ஈரானிய அரசியல் – ராணுக்கட்டமைப்பிலும் ஒரு முக்கியமான நபர்.
1998 ஆண்டு முதல் அவர் ஈரானின் புரட்சிகர காவலர் படைப்பிரிவான குட்ஸின் தலைவராக இருந்து வருகிறார். குட்ஸ் படைப்பிரிவுதான் வெளிநாடுகளில் ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.
குட்ஸ் படைப்பிரிவு நேரடியாக ஈரானிய ஆன்மீகத்தலைவர் ஆயத்துல்லா அலி காமினேயுடன் தொடர்பில் இருப்பதால் ஈரானை பொறுத்தவரை சூலேமானி, ஒரு கதாநாயகன்.
சூலேமானி கொல்லப்பட்ட செய்தி வெளியானவுடன் இது குறித்து ருவிற் செய்த அமெரிக்க அரசதலைவர் டொனால்ட் ரம்ப், எந்தவித வசனங்களையும் இடாமல் அமெரிக்கக் கொடியின் படத்தை பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் ஆளில்லா வான்கலத்திலிருந்து தாக்குதல் நடத்தியதில், ஜெனரல் சூலேமானி மற்றும் அபு மஹ்தி அல்-முஹன்டியும் கொல்லப்பட்டதாக ஈரானின் புரட்சிகர காவல் படை உறுதிபடுத்தியுள்ளது.
இந்த வார ஆரம்பத்தில்; பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஈரானிய ஆதரவு கொண்ட அமைப்பு சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலையடுத்து தொடர்ந்து உலக எண்ணெய் சந்தையில் மசகு எண்ணையின் விலை 4 சதவீதம் உயர்ந்துள்ளது.