இலங்கை தமிழ் அரசு கட்சியின் 70வது ஆண்டு நிறைவு வருடம் இது. இதை முன்னிட்டு, மாவட்டரீதியாக நிகழ்வுகளை கட்சி நடத்தி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால், இந்த ஏற்பாடு.
யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி என நிகழ்வுகள் வரிசையாக நடந்து முடிந்த நிலையில், முல்லைத்தீவில் சிக்கலில் சிக்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனே அங்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார். பல மாவட்டங்களில் தமிழ் அரசு கட்சிக்கு பல எம்.பிக்கள் இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் ஆளாளுக்கிடையில் உள்குத்தும், இரகசியமாக எதிராக வேலை செய்வதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் முல்லைத்தீவு அப்படியல்ல. குத்தச்சண்டை அரங்கத்தில் ஏற்றிவிடப்படும் இரண்டு எதிராளிகள் எப்படி நடப்பார்களோ, அப்படித்தான் சிவமோகன் எம்.பியும், சாந்தி எம்.பியும் நடக்கிறார்கள்.
அங்கு உள்குத்து, இரகசிய மோதல் எல்லாம் கிடையாது. நேரடி மோதல்தான்.
நேற்று (2) தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடந்தது. இதில் சிவமோகன் எம்.பி கலந்து கொள்ளவில்லை. சாந்தி எம்.பி கலந்து கொண்டிருந்தார்.
அங்கு சிவமோகன் எம்.பி குறித்து கரசாரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தினார். கட்சியின் 70வது ஆண்டு விழா குறித்து தனக்கு எதுவுமே தெரியாது, சிவமோகன் தனக்கு சொல்லாமல் அனைத்தையும் செய்கிறார், நான் எதற்கு மாவட்ட எம்.பியாக இருக்க வேண்டுமென பொரிந்து தள்ளியிருக்கிறார்.
இன்று (3) மீண்டும் கூட்டம் இடம்பெறுகிறது. அதில் சிவமோகனும் வருவார். அப்போது பேசி தீர்த்துக் கொள்ளலாமென அவரை கட்சித் தலைமை சமரசம் செய்தது.