தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜனநாயக மக்கள் முன்னணியும் இணைந்து வியூகம் வகுத்து செயற்பட்டால் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையை இரண்டாக அதிகரித்து கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றில் இன்று இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்வில் பங்கேற்றபோது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் போட்டியிட வேண்டும் என இதற்கு முன்னரும் தேர்தல் காலங்களில் பரீசிலிக்கப்பட்டது.
ஆனால், அத்திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையிலேயே தற்போதும் சாதகமான சூழ்நிலை பற்றி ஆராயப்பட்டு வருகின்றது.
இலங்கைத் தமிழர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலும் வாழ்கின்றனர். அவர்களின் நலன் கருதியே வெளிமாவட்டங்களில் போட்டியிடுவது சம்பந்தமாக பரிசீலித்து வருகின்றோம்.
எனினும், ஏனைய தமிழ்க் கட்சிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் போட்டியிட வேண்டும். அது பற்றி ஆராயப்பட்டு வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிட்டால் அது மனோ கணேசனுக்கு இரண்டு விதத்தில் தாக்கம் செலுத்தலாம். ஒன்று அவரது வெற்றி வாய்ப்பைக் குறைக்கலாம்.
நாங்களும் அவரும் இணைந்து வியூகம் வகுத்துச் செயற்பட்டால் அவரின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதுடன் மேலுமொரு பிரதிநிதித்துவத்தையும் பெறலாம்.
எனவே, தேர்தல் முறைமை, வாக்காளர் எண்ணிக்கை உட்பட மேலும் சில காரணிகளை ஆராய்ந்து முடிவுகளை எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.