பலாலி சர்வதேச விமான நிலையத்தில் அறவிடப்படும் வரிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து தென்னிந்தியாவுக்கு செல்லும் பயணிகளுக்கான கட்டணங்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தை காட்டிலும் அதிகமாக உள்ளன.
விமான நிலையக் கட்டணம் சாதாரணமாக 6000 ரூபாவாக உள்ள நிலையில் பலாலியில் அதனைவிட இரண்டு மடங்கு அறவிடப்படுகிறது.
அத்துடன் கொழும்பு – சென்னை விமானக் கட்டணம் 22000 ரூபாவாக உள்ள நிலையில் பலாலி – சென்னை விமானக் கட்டணம் 28000 ரூபாவாக அறவிடப்படுகிறது.
கொழும்பு – சென்னை பயணத்தின்போது பயணி ஒருவர் 30 கிலோகிராம் பொதியை கொண்டு செல்லமுடியும்.
எனினும் பலாலி – சென்னை பயணத்தின்போது பயணி ஒருவர் 15 கிலோகிராம் பொதியை மாத்திரமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறார்.
இந்தநிலையில் குறித்த பிரச்சினைகளை ஆராய்ந்து ஒரு மாதத்துக்குள் தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.