முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவால் கொண்டு வரப்படுகின்ற பிரேரணைகள் தோற்கடிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து கருத்துரைக்கையில்,
விஜேதாச ராஜபக்சவினால் கொண்டு வரப்படும் விகிதாசார தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆக்கப்படும்.
குறிப்பாக சிறிய கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 5 வீதமானவற்றை 12.5 வீதமாக்கினால் சிறுபான்மை கட்சிகள் மட்டுமல்ல சிறிய கட்சிகளுக்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
12.5 வீதமான வெட்டுப் புள்ளி அபாயகரமானது இதனை நிராகரிப்போம். ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி இந்த நாட்டில் இல்லாமல் ஆக்கப்படுவதற்கு இனவாதத்தையும் இனத்துவேசத்தையும் கக்கி வெட்டுப் புள்ளி மூலமாக சிறுபான்மை சமூகத்தை நாடாளுமன்றில் அடக்கி ஒடுக்க நினைக்கின்ற விஜேதாச ராஜபக்ச போன்றவர்களின் இரு பிரேரணைகளும் தோற்கடிக்கப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்திருக்கிறோம் என கூறியுள்ளார்.