ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற தீர்மானம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதால் டிரம்ப் கடும் கொந்தளிப்பில் உள்ளார்.
ஈராக்கில் அமெரிக்கா நடத்திய தாக்குலில் ஈரான் தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஈராக் பாராளுமன்றம் கூடியது, அதில், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா படைகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என தீர்மானம் முன்மொழியப்பட்டது.
தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க 150 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், 170 பேர் ஆதரவாக கையேழுத்திட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
ஈராக்கின் பாராளுமன்றம் நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க படைகளுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பாக்தாத்திற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அச்சுறுத்தியதாகவும், படைகள் வெளியேறினால், அங்குள்ள விமானத் தளத்தின் செலவை ஈராக் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
டிரம்ப் கூறியதாவது, எங்களிடம் மிகவும் அசாதாரணமான விலையுயர்ந்த விமான நிலையம் உள்ளது. இது கட்டுவதற்கு பில்லியன் கணக்கான டொலர்கள் செலவானது. அதை அவர்கள் எங்களுக்கு திருப்பிச் செலுத்தாவிட்டால் நாங்கள் வெளியேற மாட்டோம்.
ஈராக் இதற்கு முன் பார்த்திராதது போல் நாங்கள் அவர்களுக்கு பொருளாதாரத் தடைகளை விதிப்போம் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.