வீடொன்றை அல்லது சிறிய வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிக்கும் திட்டங்கள் உரிய முறையில் தயாரிக்கப்பட்டிருப்பின் அதற்கான அனுமதியை ஒரே நாளில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வீட்டு வசதிகள் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
நிர்மாணப்பணிகளுக்கான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது நிலவும் கடுமையான சட்ட திட்டங்கள் மற்றும் நீண்டகால தாமதம் காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர்.
எனவே நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களை இலகுபடுத்தி, மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை முடியுமான அளவு குறைப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேநேரம், முதன்முறையாக வீடொன்றை கொள்வனவு செய்யும் ஒருவருக்கு நீண்டகால கடன் மற்றும் நிவாரண வட்டி முறைமையின் கீழ் கடன் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என அவர் குறிப்பிடடுள்ளார்.
மாகாண மற்றும் பிரதேசங்களுக்கு ஏற்ப முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கண்டறிந்து அவற்றுக்கான அனுமதியையும் அரசாங்க நிறுவனங்களினூடாகவே மேற்கொண்டு முதலீட்டுச் சபைக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.