சபாநாயகர் கருவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், அண்மையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கரு ஜயசூரிய திடீரென எழுப்பிய கேள்வியால், ரணில் விக்கிரமசிங்க திக்குமுக்காடி போய்விட்டார் என அறியமுடிகின்றது.
அக்கேள்விக்கு பதிலளிக்காமல், ரணில் விக்கிரமசிங்க நழுவி விட்டார் என்றும் அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பீடத்தினால் அல்லது செயற்குழுவினால் அல்லது தேர்தல் செயற்பாட்டினால் தனக்கு என்ன அதிகாரந்தான் கிடைக்கப் போகின்றது என சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முகத்திற்கே கேட்டுள்ளார்.
சபாநாயகர் பதவியிலிருந்து விலகி, பொதுத்தேர்தல் செயற்பாடுகளுக்காக ஒத்துழைப்பு நல்குமாறு கரு ஜயசூரியவை ஐக்கிய தேசியக் கட்சியின் கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுத்தேர்தல் செயற்பாடுகள் கட்சித் தலைமைப்பீடத்தினால் முன்னெடுக்கப்படுவதாக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
என்றாலும், நேற்று முன் தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் செயற்பாட்டுச் சபையொன்றை உருவாக்கி, அதன் மூலம் தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாட்டுச் சபையின் தலைமைப் பொறுப்பை கரு ஜயசூரியவுக்கு வழங்குவதற்கு, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார்.
எவ்வாறாயினும் கரு ஜயசூரியவை கட்சியின் தலைமைக்கு நியமிக்குமாறும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பொதுத்தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச போன்றோர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் எதிர்பார்க்கையாகவும் உள்ளது.