ஈராக்கில் இருந்து அடுத்த சில தினங்கள் அல்லது வாரங்களுக்குள் வெளியேறுவதாக அமெரிக்க ராணுவம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு தொடர்பான கடிதம் ஒன்றை சர்வதேச செய்தி ஊடகம் ஒன்று பகிரங்கப்படுத்தியுள்ளது.
ஈரானிய தளபதி குவாசிம் சுலைமானி பாக்தாதில் வைத்து அமெரிக்க ராணுவம் படுகொலை செய்ததன் எதிரொலியாக ஈராக் பாராளுமன்றம் அமெரிக்க துருப்புகளை நாட்டில் இருந்து வெளியேற்றும்படி அரசுக்கு நெருக்கடி அளித்த நிலையிலேயே அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து இந்த முடிவு வெளியாகியுள்ளது.
ஈராக்கில் அமெரிக்க ராணுவத்திற்கு தலைமை தாங்கும் தளபதி வில்லியம் சீலி, ஈராக்கிய ராணுவ தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில், நாட்டைவிட்டு மிக விரைவில் வெளியேற இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க துருப்புகள் வெளியேறும் நடவடிக்கைக்கு தயாராவதாகவும், இது எதிர்வரும் சில தினங்களில் அல்லது வாரங்களில் நடைபெறும் எனவும் அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்களை வெளியேற உத்தரவிட்ட உங்கள் நாட்டின் இறையாண்மை முடிவை மதிப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியும் ஈராக் பாதுகாப்பு அதிகாரியும் குறித்த கடிதம் உண்மையானது எனவும் உரிய முறைப்படி வழங்கப்பட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.