இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டிக்கான இலங்கையின் விளையாடும் 11 வீரர்கள் பட்டியலிருந்து ஆல்-ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸை வெளியேற்றியது அணி நிர்வாகத்தின் ஒருமித்த முடிவாகும் என்று இலங்கை அணி மேலாளர் அசாந்தா டி மெல் விளக்கமளித்துள்ளார்.
கடைசியாக ஆகஸ்ட் 2018ல் டி -20 போட்டியில் விளையாடிய 33 வயதான ஆல்ரவுண்டர் மேத்யூஸ், இந்திய சுற்றுப்பயணத்திற்கான அணியில் திரும்ப அழைக்கப்பட்டார்.
மேத்யூஸுக்கு பந்துவீச்சில் போதுமான பயிற்சி இல்லை, எனவே முதல் போட்டியில் அவரை விளையாட வேண்டாம் என்று அணித்தலைவர் லசித் மலிங்கா, பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மற்றும் அணி மேலாளர் ஆகிய நாங்கள் மூவரும் முடிவு செய்தோம்.
மீதமுள்ள இரண்டு போட்டிகளில் மேத்யூஸ் விளையாடுவாரா என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியாது என இந்திய சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி தேர்வாளருமான டி மெல் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணி திங்கள்கிழமை காலை இந்தூருக்கு புறப்பட்டது. இரண்டாவது டி-20 போட்டி ஜனவரி 7ம் திகதி செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டுள்ளதால் போட்டிக்கான பயிற்சிக்கு எங்களுக்கு நேரம் இல்லை.
கடைசி இரண்டு போட்டிகளுக்கு இடையில் கூடுதலாக ஒரு நாள் இடைவெளி உள்ளது, ஆனால் முதல் இரண்டு போட்டிகளுக்கு இடையில் இல்லை, இருந்திருந்தால் வரவேற்கப்பட்டிருக்கும்.
ஆனால், இந்தியா-இலங்கை தொடரின் திட்டமிடல் இரண்டு வாரியங்களுக்கிடையிலான முடிவாகும் என்று இலங்கை அணி மேலாளர் அசாந்தா டி மெல் தெரிவித்துள்ளார்.