ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனமானது கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சி புரிந்த அரசுகளின் பொதுவான திசையிலிருந்து விலகிச் செல்லுகின்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் இது மிக அவதானமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி மிக முக்கியமான வெற்றியைப் பெற்றுக்கொண்டார். இந்தப் பாரிய வெற்றியில் காணப்படும் பிரச்சினைக்குரிய விடயம் யாதெனில் பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்களைத் தவிர ஏனைய மக்கள் ஜனாதிபதியில் நம்பிக்கை வைப்பதற்குத் தயாராக இல்லை என்பதாகும்.
இதை எவ்விதத்திலும் ஜனாதிபதி மீது அவதூறு கொண்டுவரும் நோக்கில் நான் கூறவில்லை, மாறாக தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒன்றிணைந்த நாடாக நாம் இருக்க வேண்டும் என்பதில் கரிசனையாக இருந்தால், இத்தகைய ஒரு முக்கியமான அம்சத்தை நாம் புறக்கணிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டவே இந்தக் கருத்தை முன்வைக்கின்றேன்.
ஒரு நாட்டின் செல்வாக்குமிக்க தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்விலே அவரது சொந்த மக்கள் அவரில் நம்பிக்கை வைக்கின்றார்களா என்பது முக்கியமானது அல்ல.
மாறாக ஏனைய மக்கள் அவரில் நம்பிக்கை வைக்கத் தயாராக உள்ளார்களா என்பதே முக்கியமாகும். துரதிஷ்டவசமாக இது இன்னும் தேடப்படுகின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.
ஜனாதிபதி தனது வெற்றிக்குப் பின் வெளியிட்ட இரண்டு கருத்துக்களில் இந்த விடயம் தொடர்பில் தாம் தெளிவான விளக்கத்தோடேயே உள்ளார் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.
ருவன்வெலிசாயவில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் கூறியிருந்த அதேவேளை மிகத்தெளிவாக தான் முழு நாட்டுக்கும் ஜனாதிபதி என்றும், தனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் தானே ஜனாதிபதி என்பதனையும் சேர்த்தே கூறியிருந்தார்.
எமது நாடானது பல்வேறு கலாசாரங்கள், மொழிகள், சமயங்கள், இனங்கள் என்பவற்றைப் பிரதிபலிக்கும் பன்முகத்தன்மை கொண்ட மக்கள் குழுக்களைக் கொண்ட ஒரு நாடு என்பதை ஏற்றுக்கொண்டு, ஜனாதிபதி இந்த இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுப்பார் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
இந்த ஒவ்வொரு மக்களின் சமத்துவம் என்பது அவர்களின் எண்ணிக்கையின் பலத்திலே தங்கியிருக்கவில்லை.
ஜனநாயகமானது தப்பிப்பிழைக்கவும், செழிப்படையவும் வேண்டுமேயன்றி வெளிப்படையான பேரினவாதத்தை நோக்கிச் செல்லாமல் இருக்க வேண்டுமென்றால், இந்தக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால், கவலைக்கிடமாக இம்மாதம் 3ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அத்தகைய பின்னடைவான ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
பிரச்சினை உருவாவதற்கு வழி சமைத்து அது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்து மூன்று தசாப்தங்களாக பல தீமைகளைக் கொண்டுவருவதற்குக் காரணமாக இருந்த எமது நாட்டின் தலைவர்களின் பின்னடைவான சிந்தனைக்கு ஒத்த சிந்தனையாக அது அமைந்திருந்தது.
எமது கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி அல்லது ‘பெடரல் கட்சி’ என அறியப்பட்ட கட்சி குடியுரிமை சட்டத்தின் விளைவாக பிறந்த ஒரு கட்சியாகும்.
இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் ஆனது முதலாவது நாடாளுமன்றத்தில் 7 அங்கத்தவர்களைக் கொண்டிருந்த கிட்டத்தட்ட 8 இலட்சம் மக்களின் வாக்குரிமையை இரத்துச் செய்தது.
பெரும்பான்மையினரின் விருப்பம் என்ற பெயரிலேயே ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையை இது பறித்தது. மேலும் அவர்களுடைய குடியுரிமையையும் அதை இல்லாமல் செய்தது.
சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தின் பேரினவாத செயற்பாடு காரணமாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சி எனும் இன அடிப்படையிலான ஒரு கட்சி உருவாவதற்கான தேவை உண்டாகியது என்பதை இந்த நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
1956ஆம் ஆண்டு அரச மொழிகள் சட்டமானது சிங்கள மொழியை மாத்திரம் அரசகரும மொழியாக ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்தப் பேரினவாதம் மேலும் புலப்படும் வகையில் உருப்பெற்றதை நாம் கண்டோம்.
நமது தலைவர்கள் அமைதியான முறையிலே காலி முகத்திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டபோது தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. அது பின்னர் தொடர்ச்சியான படுகொலைகளாக மாறியது.
முதலாவது குடியரசு யாப்பு வரையப்பட்டபோது மொழிகள் தொடர்பில் இருந்த அநீதியை திருத்துவதற்கு எமது கட்சி முயற்சி செய்தது. கே.ஜே.எல். குரே இலங்கையின் அரசமைப்பு மற்றும் நிர்வாக சட்டங்கள் என்னும் தனது ஆய்வுக் கட்டுரையின் 81ஆவது பக்கத்திலே பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“அரசமைப்பு சபையானது 1971ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் திகதி மொழி தொடர்பான சட்டத்தை 88 வாக்குகளினால் நிறைவேற்றியது (10 அங்கத்தவர்கள் வாக்களிக்கவில்லை). அந்தச் சட்டமானது பின்வருமாறு அமைந்திருந்தது.
அனைத்து சட்டங்களும் சிங்கள மொழியில் இயற்றப்பட்ட வேண்டும், அவ்வாறு இயற்றப்படுகின்ற ஒவ்வொரு சட்டத்துக்கும் தமிழாக்கம் இருத்தல் வேண்டும்.”
பெடரல் கட்சி பின்வரும் திருத்தங்களை முன்மொழிந்திருந்தது.
சிங்களமும் தமிழும்
a ). சட்டங்கள் இயற்றப்படும் மொழிகளாக இருத்தல் வேண்டும்
b ). அரச கரும மொழிகளாக இருத்தல் வேண்டும்
c ). நீதிமன்றங்களின் மொழிகளாக இருத்தல் வேண்டும்
d ). அனைத்து சட்டங்களும் வெளியிடப்படும் மொழிகளாக இருத்தல் வேண்டும்
இந்த மும்மொழிவுகள் அனைத்தும் 88 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டன. இவற்றுக்கு ஆதரவாக 13 வாக்குகள் கிடைத்தன.
இந்தத் திருத்தங்களின் விவாதங்களின் பின்னர் பெடரல் கட்சியின் தலைவரான எஸ்.ஜே.வி.. செல்வநாயகம் சபையில் உரையாற்றியிருந்தார்.
அந்த உரையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பிலே தமிழ் பேசும் மக்களின் மொழி உரிமை திருப்திகரமாக அமையவில்லை என்பதனாலே இந்தச் சபையின் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுவது நன்மையளிக்காத விடயமாகும் என்றும், அன்றைய தினம் சபையின் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுகின்ற வேளைக்கு பின்னர் தாம் சபைக்கு சமூகமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.