சஜித், ரணில் அல்லது சுமந்திரன் மூவரில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்து முதலில் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்துவிட்டு அதன் பின்னர் விவாதத்திற்கு வாருங்கள்.
ஐக்கிய தேசிய கட்சிக்குள் இரண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளனர் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தோல்விக்கு சஜித் பிரேமதாசவின் அளவுக்கு அதிகமான பேச்சே காரணம் எனவும் அவர் கூறினார்.
ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்க கொள்கை பிரகடனம் மீதான இருநாட்கள் விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் அதில் உரையாற்றியபோதே இராஜாங்க அமைச்சர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
எதிர்க்கட்சி தலைவரின் கன்னியுரை இன்று சபையில் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவா என்ற கேள்வி எழுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்க்கட்சி தலைவர்கள் இருவர் உள்ளனர். முதலில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தீர்மானித்து அதன் பின்னர் உரையாட வர வேண்டும்.
சஜித் பிரேமதாசவின் அதிக அளவிலான பேச்சே அவர்களின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. எனவே இன்னும் அதிகமாக நீங்கள் பேசுங்கள், அப்போது தான் எமக்கு வாக்கு அதிகரிக்கும். அதேபோல் இன்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இடையில் எதிர்க்கட்சி தலைவர் மோதல் வந்துள்ளது.
சுமந்திரன் எதிர்க்கட்சி தலைவரா? அனுரகுமார எதிர்க்கட்சி தலைவரா? ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவரா? அல்லது சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவரா என்பது குறித்து முதலில் உங்களிடம் ஒரு கலந்துரையாடலை நடத்தி ஒருவரை நியமியுங்கள்.
இன்று எம்.சி.சி குறித்து, சிங்கபூர் உடன்படிக்கை குறித்து, விலை உயர்வு குறித்து எல்லாம் பேசும் எதிர்க்கட்சி தலைவர் அன்று ஆட்சியில் இருக்கும் போது ஏன் வாய் திறக்கவில்லை.
சிங்கபூர் உடன்படிக்கை, எம்.சி.சி உடன்படிக்கை அமைச்சரவைக்கு கொண்டுவந்த நேரம் நீங்கள் அமைச்சரவையில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என அப்போதைய ஜனாதிபதி கூறினார்.
இராணுவ தண்டிப்பு குறித்து நடவடிக்கை எடுத்தபோது ஏன் வாய் திறக்கவில்லை. அப்போதெல்லாம் வாய் திறக்காது இன்று நீங்கள் நியாமம் பேச வந்துள்ளீர்கள்.
உங்களின் ஆட்சிக் காலத்தில் செய்த எதனையும் நாம் செய்ய மாட்டோம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.