ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என நீதி அமைச்சர் நிமால் சிறிபால சில்வா கூறியுள்ளார்.
இதனை இங்கு கூறாது உங்கள் அரசுக்கு முதுகெலும்பு இருந்தால் நடைபெறவுள்ள ஐ.நா கூட்டத் தொடரில் வைத்து கூறுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கம் கடந்த 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை பேரவையில் வைத்து 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதாக இணக்கம் தெரிவித்தே அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
எனினும் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட அடுத்த ஆண்டில் இருந்து அப்போதைய ஜனாதிபதி, பிரதமர், சிரேஷ்ட அமைச்சர்கள் இதனை நிறைவேற்றமாட்டோம் என கூறி வந்தனர்.
எனினும் இங்குள்ள எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு பிரேரணையை நிறைவேற்ற கால அவகாசம் வழங்க இணக்கம் தெரிவித்தனர்.
இலங்கை அரசு நிறைவேற்ற மாட்டோம் என கூறிய விடயத்தை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என மக்களுக்கு கூறி கால அவகாசம் வழங்கி அதனை நீர்த்துப் போகும் அளவுக்கு கொண்டுவந்து விட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் தற்போதைய அரசின் நீதி அமைச்சர் ஐ.நா தீர்மானத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என அண்மையில் கூறியுள்ளார்.
உங்கள் அரசுக்கு முதுகெலும்பு இருந்தால் இந்த கூற்றை நடைபெறவுள்ள ஐ.நா கூட்டத் தொடரில் கூறுங்கள். உங்களுக்கு தில் இருந்தால் ஐ.நா உறுப்பு நாடுகளில் இருந்து விலகுங்கள் பார்க்கலாம்.
இவ்வாறான திமிர் கதைகளை கூறி நாட்டில் பிரச்சினைகளை அதிகரிக்கும் வேலைகளையே செய்து வருகின்றனர்.
அண்மைய ஜனாதிபதியின் உரையில் கூட இந்த நாட்டில் தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்பதைப் போலவே உரையாற்றியுள்ளார்.
தமிழினம் இந்த நாட்டில் அதிகார பகிர்வு ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வை கோரி வருகின்றது. அண்மையில் இந்திய பிரதமர் கூட 13வது திருத்த சடட மூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் எனக் கூறியிருந்தார்.அதனை கூட செய்ய மாட்டேன் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
அப்படியானால் தமிழ் மக்களுக்கான இடைக்கால தீர்வை கூட தர அவர் தயாராக இல்லை. எனவே இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க ஐ.நா தலையிட வலியுறுத்தி வடக்கு கிழக்கில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.