ஈரான் நாட்டின் அதிரடி ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க துருப்புகள் பல கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஈராக்கில் உள்ள பிரித்தானிய துருப்புகளின் நிலை குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் குத்ஸ் படைகளின் தலைவரான குவாசிம் சுலைமானியின் படுகொலைக்கு பழிவாங்கும் நோக்கில்,
அவரது உடல் அட்டகம் செய்யப்படும் அதே வேளையில், ஈரான் அமெரிக்க துருப்புகள் மீது ஏவுகணை தாக்குதல் முன்னெடுத்தது.
மேற்கு ஈராக்கில் அல்-அசாத் இராணுவ தளங்கள் மற்றும் எர்பில் பகுதியில் உள்ள ஒரு தளம் என ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடுத்தது.
இந்த தாக்குதலில் சுமார் 80 அமெரிக்க துருப்புகள் கொல்லப்பட்டதாக ஈரானின் முக்கிய செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டாலும்,
அமெரிக்கா தங்கள் நாட்டு துருப்புகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்றும், எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இதே தகவலை தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் ஈராக்கில் உள்ள பிரித்தானிய துருப்புகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சகம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.
ஈராக்கில் பிரித்தானியா சார்பில் 400 துருப்புகள் உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அல்-அசாத் இராணுவ தளமானது அமெரிக்க துருப்புகள் அதிகமான பயன்படுத்தும் பகுதி என கூறப்படுகிறது.
இதனிடையே இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் இன்று காலை ஈரானின் ஏவுகணை தாக்குதல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஈராக்கிய இராணுவத் தளங்கள் மீதான இந்த தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். உயிரிழப்புகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் பயன்பாடு ஆகியவற்றில் எங்கள் கவலையை பதிவு செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.