ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலான இறுதி முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும், தேர்தல் முடிந்த பின்னரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்தும் தொடர்பில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டும் என ஒரு தரப்பினர்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் தலைவராக செயற்பட வேண்டும் என மற்றைய தரப்பு வலியுறுத்தி வருகின்றது.
எதிர்வரும், ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறக் கூடிய சாத்தியம் காணப்படுகின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் தலைமைத்துவம் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் கூடியது.
இதன் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் குறித்து விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் குறித்து செயற்குழு கூட்டத்தில் வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தி இறுதி தீர்மானத்தை எட்டுவோம் என கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்றைய கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழு கூட்டமும், கட்சியின் செயற்குழு கூட்டமும் எதிர்வரும் 16ம் திகதி வியாழக்கிழமை மீண்டும் கூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.