இன பேதமின்றி அனைத்து இனவாதிகளையும் தோற்கடிக்க வேண்டும் என ராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சமயம் மற்றும் இனவாதத்தை அடிப்படையாக கொண்டு உருவான அரசியல்வாதிகள் இலங்கைக்குள் நல்லிணக்கத்தை அழித்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கண்டி – பன்வில பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச தோல்வியடைந்திருந்தால், அவர் மட்டுமல்ல முழு நாடும் தோல்வியடைந்திருக்கும்.
தோல்வியடைந்திருந்தால், நாடு வேறு திசையில் சென்றிருக்கும். இதனால், நாட்டில் உள்ள அனைத்து இனவாதிகளையும் தோற்கடிக்க வேண்டும்.
இதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் பறங்கியர் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். அன்று நாட்டில் நல்லிணக்கம் இருந்தது.
இனவாத, அடிப்படைவாத அரசியல் உருவாகியதால் அந்த நல்லிணக்கம் இல்லாமல் போனது. மதத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் நாட்டை அடிப்படைவாதத்திற்குள் தள்ளியது.
நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கும் இந்த வெற்றியின் பங்காளிகளாக மாற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.