கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரின் துணையுடன் தனிநபர் ஒருவர் அடாத்தாக அபகரிப்பு செய்துவருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
அவ்வித அனுமதிகளைப் பெறாமலும் ஆவணங்கள் இல்லாமலும் இராணுவத்தினரின் துணையுடன் அப் பகுதிக்குள் நுழைந்து கனரக வாகனம்(ஜே.சி.பி.) கொண்டு சுத்தப்படுத்தி வீடு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் காணியை அவர் சுத்தம் செய்யப் பயன்படுத்திய கனரக வாகனம் அப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாது அபகரிக்கும் பகுதி தாயக விடுதலைப் போரில் வீரமரணமடைந்த மறவர்களை நினவுகூரும் இடத்தை இவ்வாறு அடாத்தாக தனிநபர் சுவீகரிக்க எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இது தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் தீர்க்கமான முடிவினை தருமாறும் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு நிர்வாகத்தினர் சிறிலங்கா இராணுவ முகாமுக்குச் சென்று வினவிய பொழுது சிறிலங்கா இராணுவத்தினர் பொறுப்பற்ற பதில்களை வழங்கியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.