தமிழ் மக்களை விரோதிகளாகவும், தமிழ் மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்சவை விரோதியாகவும் மிகவும் மோசமாக சித்தரித்துவிட்டு இன்று அபிவிருத்தியில் கைக் கோர்க்கின்றோம் என்று கூட்டமைப்பு கூறிவருகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற மாவீரர் பெற்றோர்களிற்கான மாதாந்த உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொங்கல் என்பது தமிழர் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று. இவ்வாறு தமிழர் அடையாளங்களை திட்டமிட்டு இழக்க செய்யும் வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுவருகிகன்றது.
நாம் எமது அடையாளங்களை பேணி பாதுகாக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். இன்று தமிழர்கள் எனும் விடயத்தை பேச இடமற்றவர்களான சூழல் காணப்படுகின்றது.
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை பாரிய விரோதியாக தமிழ் மக்கள் மத்தியில் சித்தரித்தார்கள். தேர்தல் முடிந்து நிற்குமென்றெல்லாம் சொன்னார்கள்.
இவ்வாறு அளவுக்கதிகமான பொய்யானதும், மிகவும் மோசமான வகையில் அச்சமூட்டும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். இதன்மூலம் கோட்டாபயவை விரோதியாக தமிழ் மக்கள் பார்க்கும் அளவிற்கு அப்பிரச்சாரங்கள் இடம்பெற்றன.
அந்த பிரச்சாரத்தில் அச்சமடைந்தவர்களாக தமது வாக்குகளை எதிராக அளித்தனர். அதனை நாம் வரவேற்கின்றோம். ஆனாலும் இன்றும் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் தமிழ் மக்களை விரோதிகளாக பார்க்கும் அளவிலும் தமிழ் மக்கள் மத்தியில் அவரை விரோதியாக பார்க்கும் வகையிலுமான சூழலை ஏற்படுத்திவிட்டு இன்று அபிவிருத்தியில் கரம் கோர்த்து பயணிக்க தயார் என கூட்டமைப்பினர் கூறி வருகின்றனர்.
உண்மையில் இது ஒரு மிக மோசமான செயல் என்பதை அனைவரும் உணர வேண்டும். நேற்று இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் மக்கள் தமக்கு ஆணையை தர வேண்டும் என பேசியுள்ளார்கள்.
உங்களிற்கு கிடைத்த ஆணையை நீங்கள் சரியாக பயன்படுத்தவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்கள் கிடைத்து அதனை அவர்கள் பயன்படுத்தவில்லை. வரவு, செலவுத் திட்டத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களையே இவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
அவ்வாறான சந்தர்ப்பங்களை விட்டுவிட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு ஆணையை தாருங்கள் என்று கேட்பது எந்த வகையில் நியாயம் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
ஐந்து ஆண்டுகளில் கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் நழுவவிட்ட அக்காலப்பகுதியில் கிடைத்த சந்தர்ப்பங்களில் மக்களின் பிரச்சினைகளை முன்வைக்காது தற்போது தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றுவதற்கு ஆணையை கேட்கின்றார்கள்.
இந்த உண்மையை மக்கள் நன்கு விளங்கியவர்களாக எதிர்காலத்தில் செயற்பட வேண்டும். மக்கள் நிதானமாகவும், சிந்திக்கவும் வேண்டிய காலகட்டம் இது என குறிப்பிட்டுள்ளார்.