அரசாங்கத்தினால் வழங்கப்படும் வரி நிவாரணங்களை மக்களுக்கு வழங்காத வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் நுகர்வோர் விவகார ஆணையம் மற்றும் உள்நாட்டு வருவாய் திணைக்கத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சில்லறை, மொத்த மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வற் வரி குறைப்பு நுகர்வோருக்கு கிடைக்கவில்லை என பொதுமக்கள் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 2019ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.
மொத்த இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அதற்கமைய செயற்படுகிறார்களா என்பதை தொடர்ந்து கண்காணிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.