எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாகவுள்ள அணியினர் நாடாளுமன்றில் தனித்து இயங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, அடுத்த நாடாளுமன்ற அமர்வு முதல் இவர்கள் தனித்து இயங்குவதற்கு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ அதிகாரத்தை சஜித் பிரேமதாசவுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த தீர்மானத்தை சஜித் தரப்பு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் – சஜித் தரப்புகளுக்கு இடையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே பனிப்போர் தொடர்கிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்று சஜித் ஆதரவு தரப்பு போர்க்கொடி உயர்த்தி இருந்தது.
தேர்தலின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டுமென கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது தலைமைத்துவத்தையும் இம்மாதத்திற்குள் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டுமென அவர்கள் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
என்றாலும் ரணில் விக்ரமசிங்க தரப்பு அதற்கு உடன்படுவதாக இல்லை.
ஐ.தே.கவின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் 2024ம் ஆண்டுவரை கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே தொடர்வார் என ரணிலின் தரப்பு விடாப்பிடியாகவுள்ளது.
கடந்தவாரம் சஜித் தரப்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பிரகாரம் எதிர்வரும் 16ம் திகதி கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறான பின்புலத்தில் நேற்றுக் காலை முன்னாள் அமைச்சர் ரஞ்சிம் மத்தும பண்டாரவின் இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் சஜித் ஆதரவு தரப்பு நாடாளுமன்றில் தனித்து இயங்குவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த நாடாளுமன்ற அமர்வு முதல் தனித்து இயங்குவதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
16ம் திகதி நடைபெறும் வாக்கெடுப்பில் நம்பிக்கையின்மையின் காரணமாகவே சஜித் பிரேமதாச தரப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
இம்மாதத்திற்குள் கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக” அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.