ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ நெருக்கடிகளை எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இல்லையெனில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு பாரிய பாதிப்பு ஏற்படலாம் என்ற எச்சரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“ரஞ்சன் ராமநாயக்க நடத்திய தொலைபேசி கலந்துரையாடல் குரல் பதிவுகள் நாள்தோறும் வெளிவந்துகொண்டிருக்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசேடமாக நீதித்துறை மீது அழுத்தம் வழங்கியிருப்பதானது மிகவும் வெறுக்கக்கூடிய விடயமாகும். 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட முதலாவது நபரே நான்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி சில ஆவணங்களை வெளியிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டேன்.
நல்லாட்சி அரசாங்கம் என்னை கைது செய்தது. 10 நாட்களில் நீதிமன்றம் எனக்குப் பிணை அனுமதியை வழங்கியது.
மீண்டும் எனக்கெதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் 45 நாட்களுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் யாருடைய தேவைக்காக என்னை இவ்வாறு விளக்கமறியலில் இடச்செய்தார்கள் என்ற சந்தேகம் எனக்கு இன்று ஏற்பட்டுள்ளது. சில விடயங்களை நான் சொல்ல விரும்பவில்லை.
இருப்பினும் நீதித்துறையில் உயரிய அதிகாரி ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு, அழுத்தங்கள் காரணமாகவே என்னை விளக்கமறியலில் இடச்செய்ததாகக் கூறினார்.
ஆகவே யார் அந்த அழுத்தத்தை செய்தார்கள் என்றே நான் இன்று ஆராய்கின்றேன்.
இந்நிலையில் ரஞ்சன் ராமநாயக்க குறித்து ஐக்கிய தேசியக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதா என்பது பற்றிய தீர்மானத்திற்கு வரவேண்டும்.
ஏன் தாமதிக்கின்றார்கள் எனத் தெரியவில்லை. ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு எதிர்ப்பு தெரிவிக்காமையே அவருக்கெதிராக எதிரணி முன்வைத்த குற்றச்சாட்டாகும்.
அதேபோல எமது தரப்பினரின் சில கருத்துக்கள், செயற்பாடுகளினால் சஜித்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
ஆகவே கட்சி என்ற வகையில் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுத் தேர்தலில் கட்சிக்கு பாதிப்பு ஏற்படலாம் என நினைக்கின்றேன்” என கூறியுள்ளார்.