எந்தவொரு வெளிநாட்டுப் படைகளும் இலங்கையின் எல்லையை கூட அண்மிக்க இடமளிக்கக்கூடாது என்று இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஈராக்கில் அமெரிக்கப் படைகள் குவிந்துள்ளன. படைகளை மீளப்பெறுமாறு ஈராக் வலியுறுத்துகின்றது. எனினும் டொனால்ட் ட்ரம்ப் அதனை நிராகரித்துவிட்டு தற்போது அதனை செய்யமுடியாது என்றும் கூறியிருக்கின்றார்.
ஈராக்கில் படைகள் இருக்க வேண்டுமா என்பதை அமெரிக்காவா தீர்மானிக்க முடியும்? ஆகவேதான் அமெரிக்காவுடனான இந்த எம்.சி.சி ஒப்பந்தத்தின் அபாயகர நிலை குறித்து நாங்கள் தெளிவுப்படுத்துகின்றோம்.
எம்.சி.சி ஒப்பந்தமோ அல்லது வேறு ஒப்பந்தத்தின் ஊடாகவோ இந்த நாட்டில் அமெரிக்கா தடம் பதிப்பதற்கு தற்காலிகமாகவும் இடங்கொடுத்தால் ஏற்படும் நிலை ஈராக்கை உதாரணப்படுத்தி புரிந்துகொள்ள முடியும்.
ஆகவே தற்காலிகமாகவும் சரி, இந்த நாட்டில் வெளிநாட்டுப் படைகளை தங்குவதற்கு இடமளிக்கக்கூடாது. அமெரிக்கா இன்று ஏனைய நாடுகளுக்குள் அத்துமீறுவதை பழக்கமாக வைத்துள்ளது.
எனினும் எந்த வெளிநாட்டுப் படைகளுக்கும் எமது நாட்டின் எல்லையை தொடுவதற்கும் அனுமதிக்கக்கூடாது.
மேலும் எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கம் விரைந்து ஒரு தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன்” என கூறியுள்ளார்.