நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளார்.
நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிடுவதன்மூலம் அரசியலமைப்பின் பிரிவு 111 சி (2) இன் பிரகாரம் அவர் குற்றவாளி எனபதனாலேயே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சமகால அரசியலில் யாருமே எதிர்பாராத வகையில் மிகப்பெரும் அவமான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி குரல்பதிவுகள் கசிவானது ஐ.தே.க விற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஐதேக ஆட்சிக்கு வந்திருந்தால் ஊழல், மோசடி மற்றும் பாலியல் விவகாரங்களுக்கு எதிரான அமைச்சராக எதிர்வு கூறப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க பல்வேறு ஊழல் மோசடி விவகாரங்களுக்கு துணை போயிருப்பது தற்போது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரகசிய தொலைபேசி உரையாடல் மூலம் நீதித்துறை உட்பட பல்வேறு விடயங்களை கேள்விக்குட்படுத்தியிருக்கின்ற ரஞ்சன் ராமநாயக்கவை கட்சியின் அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்தவும் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இன்று காலை வழங்கியிருந்தார்.
இந்நிலையில், கடந்த ஆட்சியில் நீதித்துறையில் தலையிட்டு அழுத்தங்கள் செலுத்திய விவகாரம் தொடர்பிலேயே தற்போது அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய ரஞ்சன், ஏற்கனவே கைது செய்து விடுதலை செய்யப்பட்டிருந்த போதிலும் மீண்டும் அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டமை அரசியல் மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.