கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின் இலங்கையில் மனித உரிமைகளுக்கு கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசிய பணிப்பாளர் இயக்குநர் மீனாக்ஷி கங்குலி எச்சரித்துள்ளார்.
2019இல் சர்வதேச மனித உரிமை நிலவரம் குறித்த தனது ஆண்டு அறிக்கையிலேயே சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
அதில் மேலும்,
இலங்கை கடந்த சில வருடங்களில் அடிப்படை உரிமைகளை மீள ஏற்படுத்துவது, ஜனநாயக ஸ்தாபனங்களை மீள கட்டியெழுப்புவதில் உருவாக்கிய முன்னேற்றங்கள் இல்லாமல் செய்யப்படலாம் என நிலவுகின்ற அச்சத்திற்கு உரிய காரணங்கள் உள்ளன.
புதிய ஜனாதிபதி கடந்த கால துஸ்பிரயோகங்களை துடைத்தெறியும் நோக்கத்துடன் உள்ளதுடன் எதிர்கால துஸ்பிரயோகங்களிற்கான வழியை ஏற்படுத்த முனைகின்றார்.
எனவே சர்வதேச குற்றங்களை மூடி மறைக்க முடியாது என்பதை கரிசனையுள்ள அரசாங்கங்கள் தெரியப்படுத்த வேண்டும்.
2009இல் முடிவிற்கு வந்த இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளிற்கும் இடையிலான உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற துஸ்பிரயோகங்களிற்கு தீர்வை காண்பதில் முன்னைய மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை மதிக்கப் போவதில்லை என்பதை இந்த புதிய அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.