இந்தியாவில் வேலை செய்துவந்த தாய்லாந்து பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில் வாடகை வீட்டிலிருந்து 43 வயதான பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்தனர். பின்னர் அங்கு சோதனையிட்டு தற்கொலைக் குறிப்பையும் மீட்டெடுத்தனர்.
இறந்தவர் 2018 அக்டோபரில் இந்தியா வந்திருந்த அஞ்சலி காஷி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“ஹெரிடேஜ் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால், ஏதோ தவறு இருப்பதாக சந்தேகித்த அண்டை வீட்டார் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் வந்து பார்த்தபோது அந்த பெண் படுக்கையில் இறந்த நிலையில் கிடந்தார். அவர் நீண்ட நாட்களாக வெளியில் வரவில்லை என பக்கத்து வீட்டு நபர்கள் கூறினர்.” என்று ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி கூறினார்.
ஒரு தடயவியல் குழு தற்கொலைக் குறிப்பை மீட்டனர். மேலும், படுக்கையில் மருந்துகள் கொட்டப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
தற்கொலைக் குறிப்பில் அவர் எழுதியது “பணம் இல்லை, வேலை இல்லை, குடும்பம் இல்லை… நான் ஒருபோதும் வாழ விரும்பவில்லை. தயவுசெய்து என் உடல் மற்றும் எஞ்சியிருப்பதை தகனம் செய்து புனித யமுனா நதியில் கரைத்துவிடுங்கள். ஐ லவ் யூ ஆக்ரா,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆரம்பகட்ட விசாரணையில் காஷி ஒரு ஸ்பா மையத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், அது மூடப்பட்டபோது, பாதிக்கப்பட்ட பல பெண்களில் அவரும் ஒருவர் என பொலிசார் தெரிவித்தனர்.
“நாங்கள் அவரது குடும்ப உறுப்பினர்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். டெல்லியில் உள்ள தாய்லாந்து தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவரது பிரேத பரிசோதனை அடுத்த 72 மணி நேரத்தில் மேற்கொள்ளப்படும்” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
சில விஷ மருந்துகளை உட்கொண்டதால் அவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் மொத்தம் 12,936 வேலையற்றோர் தற்கொலை செய்து கொண்டதாக உள்துறை அமைச்சகத்தின் (எம்.எச்.ஏ) கீழ் வரும் இந்திய தேசிய குற்ற பதிவு பணியகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.