ஈரானுக்கான பிரித்தானிய தூதர் ராப் மக்கேர் தெஹ்ரானில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்ட தகவலின் பின்னணியில், மத குரு ஒருவரின் கொலை மிரட்டல் என தெரியவந்துள்ளது.
ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் அரசுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடந்த வாரம் போராட்டத்தில் குதித்தனர்.
உக்ரேனிய பயணிகள் விமானத்தை ஈரான் துருப்புகள் சுட்டு வீழ்த்தியதை மனித தவறினால் நடந்தது என ஒப்புக்கொண்ட நிலையில், ராணுவ தலைமை பதவி விலக வலியுறுத்தி இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த போராட்டத்தை அஞ்சலி கூட்டம் என கருதி, ஈரானுக்கான பிரித்தானிய தூதர் ராப் மக்கேர் கலந்து கொண்டுள்ளார்.
இது ஈரான் அரசியலில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அவரை கைது செய்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், ராப் மக்கேர் தெஹ்ரானில் இருந்து திடீரென்று வெளியேறியதாக நேற்று தகவல் வெளியானது.
குறித்த தகவலின் பின்னணி ஏதும் அப்போது வெளியாகாத நிலையில், ஈரானின் மஷாத் பகுதியில் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் பிரதிநிதியாக செயல்பட்டுவரும் அயதுல்லா அஹ்மத் அலமோல்ஹோடா என்பவரின் கொலை மிரட்டலே காரணம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பொதுக்கூட்டம் ஒன்றில், தமது ஆதரவாளர்களிடம் பேசிய அயதுல்லா அஹ்மத் அலமோல்ஹோடா,
இங்கிலாந்து தூதர் வெளியேற்றப்பட வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். இங்கிலாந்து தூதரை வெளியேற்றுவது அவர் மீது காட்டப்படும் மிகுந்த தயவின் செயலாகும். அது மன்னிப்பாக கூட இருக்கலாம்.
ஆனால், அவர் அதற்குரியவர் அல்ல என கொந்தளித்த அஹ்மத் அலமோல்ஹோடா, இங்கிலாந்து தூதரை துண்டு துண்டாக வெட்டி வீச வேண்டும் என கொக்கரித்துள்ளார்.
இதனிடையே, உயிர் பயத்தால் ராப் மக்கேர் தெஹ்ரானில் இருந்து வெளியேறியதாக வெளியான தகவலை பிரித்தானியா மறுத்துள்ளது.
மேலும், லண்டனில் வெளியுறவு செயலாளருடனான சந்திப்பு நீண்ட காலத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்தது என்றும் வலியுறுத்தியுள்ளது.
மட்டுமின்றி, சந்திப்புக்கு பின்னர், இந்த வார இறுதியில் அவர் தெஹ்ரானுக்கு திரும்ப வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.