இலங்கையை பூர்விகமாக கொண்ட பிரித்தானிய பாடகி மகாராணியின் MBE எனப்படும் கௌரவ விருதினை பெற்றுள்ளார்.
பிரித்தானியாவில் பொது சேவை, அறிவியலுக்கான பங்களிப்பு, தொண்டு, கலை சாதனை மற்றும் பிற சாதனைகளில் ஈடுபடுபவர்களை கௌரவிக்கும் விதமாக MBE எனப்படும் மதிப்புமிக்க விருது அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கான கௌரவ பட்டியல் அமைச்சரவை அலுவலகத்தால் ஆண்டுக்கு இரண்டு முறை வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கென்சிங்டன் அரண்மனையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இளவரசர் வில்லியம் தனது பாட்டி, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிரதிநிதியாக கலந்துகொண்டார்.
இதில் இலங்கையை பூர்விகமாக கொண்ட M.I.A எனப்படும் 44 வயதான மாதங்கி அருள்பிரகாசம், “இசைக்கான சேவைகளுக்காக” கௌரவிக்கப்பட்டார். அவரது தாயார் அரண்மனையில் பெற்ற பதக்கத்துடன் இளஞ்சிவப்பு நாடாவை இணைத்து தைத்தார்.
மேற்கு லண்டனின் Hounslow பகுதியில் பிறந்த அருள்பிரகாசம், 6 மாத குழந்தையாக இருந்த போது இலங்கைக்கு வந்துள்ளனர். ஆனால் உள்நாட்டு போரின் காரணமாக 10 வயதில் மீண்டும் அகதிகளாக பிரித்தானியாவிற்கே திரும்பி தெற்கு லண்டனில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டனர்.
Rap பாடகரான மாதங்கி, தனது பாடல்களின் மூலம் அரசியல் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் விருது பெற்றது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாய்க்கு பெருமிதம் சேர்த்துள்ளார்.
அந்த பதிவில், “எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை வழங்க குறைந்தபட்ச ஊதியத்தில் பணியாற்றிய என் அம்மாவின் நினைவாக இன்று இதை ஏற்றுக்கொள்கிறேன்,”.
“ஒரு தொழிலாள வர்க்கத்தின் முதல் தலைமுறை குடியேறியவர் என்ற முறையில் எனது பங்களிப்புக்கு அங்கீகாரம் கிடைப்பது மிகவும் நல்லது. எனது உண்மையை பேசுவதற்கும், இசை மூலம் அதைச் செய்வதற்கும் சுதந்திரம் இருப்பது அந்த சலுகைகள் இல்லாதவர்களுக்காக பேச எனக்கு உதவியது. மற்றவர்களால் அமைதியாக அல்லது துன்புறுத்தப்படுபவர்களுக்காக நான் தொடர்ந்து போராடுவேன்.”
“உண்மையில் அம்மா தான் இந்த ஒன்றை செய்தார். அவர்கள் இனி இந்த நாடாவை உருவாக்க மாட்டார்கள். அவள் தைத்த MBE பதக்கங்களில் 1 எனக்கு கிடைத்துவிட்டது.” என பதிவிட்டிருந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் M.I.A ஒரு கௌரவ விருதினை பெறுவதாக முதன்முதலில் அறிவிக்கப்பட்டபோது, நெஞ்சை உருக்கும் பதிவினை வெளியிட்டார்.
அப்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில், இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் 1986 ஆம் ஆண்டில் ராணிக்காக என் அம்மா வேலை செய்யத் தொடங்கினார்.
“இந்த மரியாதை கிடைத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன், ஏனெனில் இது என் அம்மாவுக்கு பொருந்தக்கூடியது” என்று அவர் எழுதினார். “என் அம்மா தனது வாழ்க்கையின் பல மணிநேரங்களைச் செய்ததை நான் மதிக்க விரும்புகிறேன்!”
“இங்கிலாந்தில் கடந்த 30 ஆண்டுகளாக இந்த பதக்கங்களை தைத்த 2 பெண்களில் இவரும் ஒருவர். புகலிடம் பெற்ற பிறகு எனது அம்மாவும் உறவினரும் 1986 ஆம் ஆண்டில் இந்த வேலையை மேற்கொண்டனர்.”
“அவர் தனது வாழ்க்கையை இங்கிலாந்தில் கழித்தார். ராணிக்காக 1000 பதக்கங்களை தைத்தார். நான் எப்படி உணர்கிறேன் அல்லது என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமல்ல. என் அம்மா தனக்கு கிடைத்த வேலையைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்டார்.
இது எனக்கு மிகவும் தனித்துவமான சூழ்நிலை, அவளுடைய மிகச் சிறந்த குறைந்தபட்ச ஊதிய வேலையை நான் மதிக்கிறேன் என பதிவிட்டிருந்தார்.