எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட நேரிட்டாலும் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,
தேர்தலில் போட்டியிடும் சின்னம் சம்பந்தமான புதிய கூட்டணியின் கட்சித் தலைவர்கள் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஆதரவு வழங்கும் போது எந்த அர்ப்பணிப்பையும் செய்யத் தயாராக இருப்பார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது எனவும் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் தாமரை மொட்டுச் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஏற்படுத்திக்கொண்ட இணக்கத்தின் அடிப்படையில் பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.