விழுப்புரத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி ஒருவரை வெறும் 15 நிமிடத்தில் இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளனர்.
புதுச்சேரி – விழுப்புரம் மாவட்டம் எல்லையில் உள்ள பகுதி சின்னபாபு சமுத்திரத்தில் சரோஜா என்பவர் வீடு ஒன்றை கட்டி வருகிறார். அதற்காக 10 அடி ஆழமும், 1 அடி அகலத்துக்கு போர்வெல் மெஷின் மூலம் குழி போடப்பட்டுள்ளது. பின்பு போர்வெல் பணி நின்றுவிடவும் குறித்த குழியினை மூடாமல் அப்படியே விட்டுவிட்டனர்.
இந்நிலையில் குழியின் அருகே பாஸ்கர் என்பவரின் 3 வயது மகள் கோபிணி விளையாடிக்கொண்டிருக்கையில், அதில் தவறி விழுந்துள்ளார். குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்கவும் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்துள்ளனர். பின்பு குழிக்குள் இருந்து சத்தம் வருவதை அறிந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அவர்கள் விரைந்து வருவதற்குள் நேரத்தினைக் கடத்தாமல், அப்பகுதி இளைஞர்கள் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளனர். குழந்தை விழுந்த குழிக்கு அருகில் பொக்லைனை வைத்து குழி தோண்டி 15 நிமிடத்திற்குள் காப்பாற்றியுள்ளனர். குறித்த இளைஞர்களின் செயலுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.